ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சூழ்நிலைகளுக்கேற்றால் போல் தனது அரசியலைச் செய்து வருகின்றது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது மக்கள் தீர்வினை நோக்கிய அரசியலை மட்டுமே செய்கின்றது

 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சூழ்நிலைகளுக்கேற்றால் போல் தனது அரசியலைச் செய்து வருகின்றது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது மக்கள் தீர்வினை நோக்கிய அரசியலை மட்டுமே செய்கின்றது என இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின்போது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எம்.முஷாரப் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிக்கையில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை மக்கள் நலன் சார் விடயங்களை உரத்துச் சொல்வதானாலேயே அவருக்கு பல்வேறு எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றன. மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கின்றார்.
எமது கட்சியின் தலைமைக்கு சந்தர்ப்பவாத அரசியல் செய்யத் தெரியாது. அவர் எப்போதும் உண்மைக் கருத்துக்களை உரத்துச் சொல்லி வருகின்றார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பேசும் தலைமை என்று கூறிவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது சூழ்நிலைக்கேற்றால் போல் தமது அரசியலைச் செய்து வருவதை நமது மக்கள் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையை எமக்களிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்திற்கு செல்கின்ற போதிலும் அப்பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகளை ஒரு சில தினங்களில்  நிவர்த்தி செய்து தருகின்றேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாரென்றால் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அப்பிரதேசங்களுக்குச் சென்று மீண்டுமொரு வாக்குறுதியினை வழங்கவே அங்கு வருவார். இவ்வாறு மக்களுக்காக வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேற்றப்படாமல் அம்பாறை மாவட்டம் வெறும் வாக்குறுதிகளால் மட்டுமே நிறைந்திருக்கின்றது.
கல்முனைப் பிரதேசத்தினை சிங்கப்பூராக மாற்றியமைக்கப் போகின்றேன், ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைகளை சில தினங்களுக்குள்ளே நிவர்த்தி செய்யப் போகின்றேன், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையினை ஒரிரு தினங்களில் அகற்றப் போகின்றேன், பொத்துவில் பிரதேசத்தின் கடல் நீரை குடிநீராக மாற்றப் போகின்றேன் என்று இவர் வழங்கிய வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் அம்பாறை மாவட்டம் உலகில் பேசப்படுகின்ற ஓர் மாவட்டமாக உலகரங்கில் திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கும்.
அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது அபரிமிதமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் போது இம்மாவட்டத்தில் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எமது கட்சிக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. இரண்டாவது ஆசனம் கிடைக்கும் நிலையும் இங்கே உருவாகி உள்ளதனால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
எமது கட்சிக்கு இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இருந்து கிடைக்கப் பெறும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் இம்மாவட்டத்தின் உரிமை சார் விடயங்களில் உரத்து சொல்லும் குரலாக நாம் மாற்றியமைக்க உள்ளோம். நாம் வாய்ப் பேச்சில் வீரம் காண்பிப்பவர்கள் அல்லர். அனைத்து விடயங்களையும் செயல் வடிவில் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருகின்றர்கள் என்பதனை இம்மாவட்ட மக்கள் நன்குணர்ந்திருப்பார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம் என்றார்.  

Related posts