13உம் 19உம் திருத்தப்படுமா? தீர்த்துக்கட்டப்படுமா?

புதிய அரசாங்கம் வந்தகையோடு 13 19 ஆகிய இரண்டு இலக்கங்கள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரசியலமைப்பின் 13வது 19வது  திருத்தங்களே இவ்விதம் அரசியல் அரங்கில் வெகுவாகப் பேசப்பட்டுவருகின்றது.
 
1978இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்டதே இன்றைய அரசியலமைப்பு. 
ஆணைப்பெண்ணாக்கமுடியாததே தவிர ஏனைய எல்லாற்றையும் அந்த அரசயாப்பினால் ஆறில்ஜந்து பெரும்பான்மையினால் சாதிக்கமுடியுமென ஜே.ஆர்.கூறியிருந்தார்.மணிவாசகப்பெருமான் நரியைப்பரியாக்கிய கதையை அறிவோம்.அதேபோன்றொரு அறுதிப்பெரும்பான்மை பலம் இம்முறை 9வது தேர்தலில் கிட்டியுள்ளது. எனவே எதையும் செய்யும் சர்வவல்லமை 42வருடங்களின் பின்னர் கிடைத்துள்ளது.
 
இன்றைய 1978ஆம் ஆண்டு யாப்பில் இதுவரை 19திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்திருக்கின்றன.அதாவது கடந்த 42வருடகாலத்தில் இந்த 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
தற்போது 20வது திருத்தத்திற்கான பிள்ளையார்சுழியை புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் கன்னி அமர்வு இட்டுள்ளது.
 
அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலியரம்பக்வெல்ல 19வது திருத்தத்தை ரத்துச்செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்குப்பதிலாக 20வது திருத்தத்தை வரைய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
9வது புதிய பாராளுமன்றத்தின் கன்னிஅமர்வின் சிம்மாசனப்பிரசங்கத்தின்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் 19 பற்றியும் 20பற்றியும் பிரஸ்தாபித்திருந்தார்.
 
அதாகப்பட்டது 19வது திருத்தம் ஊசலாடுகிறது. அதுபற்றி கட்சிகள் தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. அதைமாற்றமுடியாது என்று ஒரு தரப்பினரும் நல்லவற்றைவிடுத்து பாதகமானதை மட்டும் மாற்றுவது என்று ஒரு சாராரும் முற்றாகவே மாற்றவேண்டும் என மற்றுமொரு சாராரும் வரிந்துகட்டிக்கொண்டிருக்கின்றனர்.
 
இல்லை ,கடந்த நல்லாட்சி  ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை மட்டுமே திருத்தி 20எனப்பெயரிடப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இன்னுமொரு சாரார் 19ஜ மட்டுமல்ல மழு யாப்பையே மாற்றி புதிய யாப்பை வரையவேண்டும். எப்படி ஜ.தே.கட்சி இன்று பாராளுமன்றில் இல்லையோ அதேபோன்று அந்தக்கட்சியின் அன்றையதலைவரான முன்னாள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன கொண்டுவந்த யாப்பும் இருக்கக்கூடாது. மொத்தத்தில் பச்சைநிறமிருக்கக்கூடாது. மாறாக ராஜபக்ச வர்க்கத்தினரின் யாப்புத்ததான்  இனிமேல் இலங்கையில் இருக்கப்போகின்றது என்ற செய்தி சொல்லப்படப்போகின்றது.
 
19இல் கைவைக்காதீர்கள் மாறாக புதிய அரசியல்யாப்பை ஏற்படுத்துங்கள் என த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். 19இல்லாதொழிக்கப்பட்டால் இனி ராஜபக்சயுகம்தான் என்று முன்னாள் பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாசவும் 19ஜ இல்லாதொழிக்க இடமளியோம் எனக்கூறியுள்ளார்.
 
இதேவேளை 19ஜ முழுமையாக இல்லாதொழிப்போம் என இன்றைய பிரதமர் மஹிந்தராஜபக்ச சூளுரைத்திருக்கிறார். ராஜபக்சாக்களை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்கு முன்னைய நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சதியே 19 எனறும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.
 
எனினும் மூன்றிலிரண்டு சர்வவல்லமை பொருந்திய ஆளும் அரசாங்கம் ஒன்றிருப்பதை மறந்தவர்களாக மக்களை கவர இக்கதைகளைப்பேசுவதாக இதனைக்கொள்ளமுடியும்.
 
13
 
19பற்றிப்பேசிக்கொண்டிருக்கையில் 13உம் வலிந்து இழுக்கப்பட்டதாகவே தோணுகிறது. காரணம் அரசாங்கம் 13ஜப் பற்றி எதுவுமே கூறாதநிலையில் அதுபற்றி அறிக்கைமன்னர்கள் விளாசிவருவது புதிராகவுள்ளது.
 
தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும்வகையில் இந்தியாவின் தலையீட்டினால் 1987இல் கொண்டுவரப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்த்தின்பலனாக திணிக்கப்பட்டதே இந்த 13.
 
அதன்படி இலங்கையில் வடக்குகிழக்கிற்காக அனைத்து பிரதேசங்களிலும் மாகாணசபைகள் தோற்றம்பெற்றன.
துரதிஸ்ட இலக்கமெனக்கொள்ளப்படும் இந்த 13 இன்னும் பரிபூரணமாக காணி பொலிஸ்அதிகாரத்துடன் அமுலாகவில்லையென்பது பரவலான குற்றச்சாட்டாகும். 
 
உண்மையில் இம்மாகாணசபை தமிழ்மக்களின் அபிலாசையை பூர்த்திசெய்ததா? அல்லது இந்தியாவின் வல்லாதிக்க அபிலாசையை பூர்த்திசெய்ய இம்முறைமை புகுத்தப்பட்டதா? என்பதை நீதிமன்றத்தில் வடக்கு கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்ற வழக்கின்போது தெரியவந்தது.
 
தற்போது நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளும் வலுவிழந்துள்ளன. அதற்கான தேர்தல் 2021மார்ச்சில் நடாத்தப்படலாமென்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்மாகாணசபை ஏப்ரல் 10ஆம் திகதியிலும் மேல்மாகாணசபை ஏப்ரல் 21ஆம் திகதியிலும் அவற்றின் பதவிக்காலங்கள் நிறைவடைந்தன.
 
இதேவேளை சபரகமுவ மாகாணசபையின் பதவிக்காலம் 2017செப்ரம்பர் 16ஆம் திகதியும் கிழக்குமாகாணசபையின் பதவிக்காலம் 2017செப்.30ம் திகதியும் வடமத்தியமாகாணசபையின் பதவிக்காலம் 2017அக்டேபர் 1ஆம் திகதியும் நிறைவுக்கு வந்தன.
அதேநேரத்தில் வடக்கு மத்திய வடமேற்கு ஆகிய 3 மாகாணசபைகளின் பதவிக்காலம் 2018செப்ரம்பரில் நிறைவுக்கு வந்தன.ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் கடந்த செப்.8ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
 
மொத்தத்தில் நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளும் அரசியல்வகிபாகம் இல்லாமல் ஆளுநர் தலைமையிலான நிருவாகச்செயற்பாடுகள் மட்டும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
 
இந்த மாகாணசபை முறைமையை ஒழிக்கவேண்டும் என்ற கோசமும் சமீபகாலத்தில் எழாமல் இல்லை. அது 13ஜ சுண்டி இழுப்பதுபோன்றது.
 
மறுபுறம் மாகாணசபைகளுக்குரிய 3அதிகாரங்களையும்  வலுப்படுத்துங்கள் எனப்பலர் குரல்கொடுத்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால்  அன்று மாகாணசபையை 2008இல் பகிஸ்கரித்தவர்களும் எதிர்த்தவர்களும் இன்று வலுப்படுத்தவேண்டும் எனக் கூறிவருவதுதான்.
 
அப்படித்தான் காணி பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டாலும் வடக்கிற்கு வழங்கமுடியாதென புதிய நீதியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
இருப்பினும் அமைச்சரவையிலுள்ள ஒரேயொரு தமிழ் அமைச்சரான டக்ளஸ்தேவானந்தாவின் கூற்றின்படி 13ஜ மாற்றும் தீர்மானத்தை யாரும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.அமைசசரவைப்பேச்சாளரும் அதனை ஊர்ஜிதப்டுத்தியுள்ளார்.
 
அதன்படி தற்போதைக்கு 13க்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் 19 நிச்சயம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
சரி இனி 19வது திருத்தம் பற்றிப்பார்போம்.
 
19.
 
1978ஆம்ஆண்டு யாப்பில் இறுதியாக 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தமே இந்த 19வது திருத்தம் என்பது. அது என்ன கூறுகிறது என்பதை  சுருக்கமாகப்பார்ப்போம்.
 
2015க்கு முன்னர் அதாவது 19வது திருத்தத்திற்கு முன்னருள்ள யாப்பில் காணப்பட்ட அம்சங்களுடன் ஒப்பீட்டுரீதியில் 19வது திருத்தத்தை பாக்கின்றபோது இலகுவாக விளங்கலாம்.
 
சரி  19 ஆம் திருத்தத்தின் விசேட அம்சங்கள்  என்ன?
 
ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
 
ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். (முன்னர் முடியாது)
 
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை.
(முன்னர் விரும்பிய அமைச்சுக்களை வைத்திருக்கலாம்)
 
இரட்டைப் பிரஜையொருவர் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
 
ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கும் ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது.
(முன்னர் பதவி நீக்கலாம்)
 
ஜனாதிபதி பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம்.
(முன்னர் ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கலாம்)
 
ஜனாதிபதி பாராளுமன்றத்தை 4-1/2 ஆண்டுகளுக்குள் கலைக்க 2/3 ஆதரவு வேண்டும்.
(முன்னர் ஒரு ஆண்டுக்குள் கலைக்க 1/2 போதும்)
 
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு 2 வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.
(முன்னர் ஒரு வாரத்துக்கு முன்பு)
 
ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் வேண்டும்.
(முன்னர் பிரதமரின் ஆலோசனை கட்டாயமில்லை)
 
அரச தாபனங்களிலிருந்து தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு.
(முன்னர் இவ்வேற்பாடு இல்லை)
 
ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
(முன்னர் 6 ஆண்டுகள்)
 
ஜனாதிபதித் தேர்தலில் 35 வயதை அடைந்தோரே போட்டியிடலாம்.
(முன்னர் 30 வயது)
 
அமைச்சரவை அமைச்சர்கள் 30 வரையும் ஏனைய அமைச்சர்கள் 40 வரையும் இருக்கலாம்.
(முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை)
 
10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடனேயே ஜனாதிபதி உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம்.
 
உயர் நீதிமன்றஇ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஒம்புட்ஸ்மன்
(முன்னர் விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)
 
அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசிலேயே ஜனாதிபதி உயர் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம்.
தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு
(முன்னர் ஜனாதிபதி விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்கலாம்)
 
இத்தகைய விசேட அம்சங்களில் தமக்குப் பாதகமான சிலவற்றை நீக்குவதற்கு தற்போது முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. அதேவேளை 19இல் 14வது சரத்தாகிய தகலறியும் சட்டம் போன்ற நலலபல விடயங்களுமுண்டு. அவற்றை நீக்க இடமளிக்கப்படமாட்டாதெனக்கருதமுடியம்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள்  பதவிக்காலம் பாராளுமன்றத்தை கலைக்கும் காலஅவகாசம் இரட்டைப்பிரஜாஉரிமைபோன்ற பலவிடயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் எனத்தெரிகிறது.
அமைச்சரவை கலைக்கப்பட்டபிற்பாடு ஜனாதிபதி நாட்டைக் கையாளும்விதம் பற்றி யாப்பில் கூறப்பட்டிருப்பது அவசியமென உணரப்பட்டுள்ளது.
 
எதுஎப்படியிருப்பினும் என்னென்ன அம்சங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன என்ற விடயம் 20வது திருத்தம்  என்ற போர்வையில் இன்று(3)  சமர்ப்பிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
மூன்றில்இரண்டு பெரும்பான்மை ஒரு கத்தியைப்போன்றது. நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். இந்த சர்வவல்லமை தைச்செய்யப்போகின்றது என்பதை பொறுத்திருந்தூன் பார்க்கவேண்டும்.
 
எதுஎப்படியிருப்பினும்  பல்லின பல்சமுகங்கள் வாழுகின்ற இந்த அழகான தீவில் நிரந்தரமான அமைதி சமாதானம் ஜனநாயகம் நிலவவேண்டுமாயின் நாட்டை வழிநடாத்தும் யாப்பு நடுநிலை தவறாது நீதியாக இருக்கவேண்டியதவசியமாகும்.
 
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்

Related posts